tamilnadu

img

பிற அரபு நாடுகளில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டம்

ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்க இறுக்கி வரும் நிலையில், பிற அரேபிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. இதை அடுத்து, இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு ஈரான் உடனான கச்சா எண்ணெய் இறக்குமதியை துண்டிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியது. மேலும், இந்த வர்த்தகத்தை துண்டித்துக்கொள்ள 8 நாடுகளுக்கு, 6 மாதம் அவகாசம் அளித்தது. இந்த அவகாசம் வரும் மே 2-ஆம் தேதி அன்று முடிவடைகிற நிலையில், அமெரிக்க உள்துறைச் செயலர் மைக் பாம்பியோ, ஈரானுடனான வர்த்தகத்தை இந்தியா உட்பட 5 நாடுகள் இனி தொடர அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அரசு தற்போது சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

உலகில் மூன்றாவது மிகப்பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, ஈரான் உடனான வர்த்தகத்தை துண்டிக்கும் பட்சத்தில் ஏற்படும் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, ஆண்டு முழுவதற்கும் 15 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கூடுதலாக சேகரிக்க, பிற அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


;